புதன், 18 நவம்பர், 2015

ஒரிசாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்*****


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
மிகக் கடுமையான புயலை ஒடிஷா எதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கை வந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக் களத்தில் இறங்கிவிட்டார். வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச் சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றார். முப்படைகளின் உதவியும் உறுதிசெய்யப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல் தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசு துணை சேர்த்துக்கொண்டது. எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்த கால்நடைகளும்.
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பு மையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டி இருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன.
புயலுக்கு முந்தைய கடும் மழையிலேயே மோசமான பாதிப்புகள் தொடங்கிவிட்டன. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய பாய்லின் புயல் இன்னும் கொடூரமான பாதிப்புகளை உருவாக்கியது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் நாசமாயின; ரூ. 3,000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் ஆயின. முன்னதாக, இதே போன்ற பெரும்புயலை 1999-ல் ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 (அடுத்தடுத்த நாட்களில் இறந்தவர்களையும் சேர்த்தாலும் 50-க்குள்தான்).
ஒடிஷாவின் இந்தச் சாதனைக்கு எது அடிப்படை? பூஜ்ய உயிரிழப்பு இலக்கோடு இந்தப் பணியை மேற்கொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். 1999 புயல் பாதிப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை, வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப் பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறது ஒடிஷா. ஆனால், மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப் பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது ஒடிஷா பேரிடர் மேலாண்மை மையம்.
தமிழக நிலை
தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் கடலூரில் மட்டும் 43 பிணங்கள் விழுந்திருக்கின்றன. 2004 சுனாமியின்போது தமிழகம் 7,996 பேரைப் பறிகொடுத்தபோதும், கடுமையாக விலை கொடுத்தது கடலூர். 2011 தானே புயலின்போதும் பெரும் விலை கொடுத்தது. இப்போதும் சீரழிகிறது. சரியாக, ஒரு மாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலை ஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை முன்பே இதைச் சுட்டிக்காட்டியது: “இன்னொரு பேரிடர் நேர்ந்தால், அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம் இல்லை.” பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரக்கால நடவடிக்கை மையங்களில் 2012-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை அம்பலப்படுத்தியது. “சுனாமியின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகையில் ஒரு மையம்கூட இந்த ஆய்வின்போது செயல்படும் நிலையில் இல்லை; கடலூரில் 14 மையங்கள் செயல்படும் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது நிலைமையின் விபரீதத்தை விவரிக்கக் கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக