செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஒரு காலத்தில்

படித்தவன் என்றால் அவன் சட்டை பாக்கெட்டில் பேனா இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
ஒரு காலத்தில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே பேனா நிப்புகள் அதிகமாக தயாரிக்கப்பட்ட ஒரே ஊர்,சாத்தூர் தான்.பேனா நிப்புகளின் தலைநகரம் என்று கூட சாத்தூரைச் சொல்லலாம்.கிட்டத்தட்ட 100க்கும் மேல் நிப் கம்பெனிகள் குடிசைத் தொழில்கள் போல நடந்து கொண்டிருந்துள்ளது.
ஒரு பேனா நிப் தயாரிப்பதில் 15 பிராசஸ்கள் இருக்குமாம்.ஒரு சிறிய பத்துக்கு பத்து அறை இருந்தால் போதுமாம்.அங்கே உடனே ஒரு நிப் கம்பெனியைத் தொடங்கிவிடுவார்களாம்.
பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில்,சாத்தூரில் தயாரிக்கப்பட்ட நிப்புகளுக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஏக கிராக்கி இருந்துள்ளது.
பால்பாயிண்ட் பேனா வரவுகளால் பிற்காலத்தில் மை ஊற்றி எழுதும் பேனாக்களின் வாழ்வு கேள்விக்குறியாக அதோடு சேர்ந்து அவற்றின் இதயப் பொருளான நிப் தயாரிப்புத் தொழிலும் நலிவடைந்து இறுதியில் காணாமலே போய்விட்டது.
அதே போல ஒரு காலத்தில் வீட்டில் ரேடியோ இருந்தால் அது பெரும் கெளரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
அன்றைக்கு ரேடியோ இல்லாத வீடுகள் இல்லை.இன்றைக்கு ரேடியோ இருக்கும் வீடுகள் இல்லை.ரேடியோ காணாமல் போன போது போகுற போக்கில் டேப் ரிக்கார்டரையும் கூட்டிக் கொண்டு போய்விட்டது.
இது போல ஒரு காலத்தில் இந்தப் பொருட்கள் இருந்தால் மட்டுமே அது வீடு என்ற நிலையில் இருந்த பல பொருட்கள் இன்றைக்கு இல்லை.
அந்த வரிசையில் கூடிய சீக்கிரம் சேரப் போவது,
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
எல்இடி,எல்சிடி என டிவி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.இன்னும் பத்து வருடங்களுக்கு பின்னர் எந்த வீட்டிலும் டிவி இருக்காது.
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து புதிய கேபிள் டிவி கட்டணம் எனும் பகல் கொள்ளை அமலுக்கு வருகிறது.அந்த கொள்ளையின்படி இதுவரையில் நீங்கள் கேபிளுக்கு மாதம் 100 ரூபாய்கள் கட்டியிருந்தால் இனி மாதம் 250 கட்ட வேண்டியதிருக்கும்.அதற்கு ஜிஎஸ்டி வேறு தனியாக வரும்.
அந்த கட்டணத்திற்கு ஜியோ இன்டர்நெட்டை இரண்டு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்து விடலாம்.அல்லது இரண்டு மாத நெட்பிளிக்ஸ் கட்டணத்தைக் கட்டிவிடலாம்...என்று மக்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.அது தான் டிவியின் கடைசிக் காலத்தின் துவக்கப் புள்ளி.
1980 களில் பிறந்தவர்களோடு சேர்ந்து பிறந்தது தான் டிவிகள்.அது அந்த தலைமுறையின் கண் முன்னேயே காணாமல் போகப் போகிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக