புதன், 14 ஆகஸ்ட், 2019

பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்துக்குப் பின்

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
18 வயதில் வீர மரணத்தை தழுவிய ஹேமு கலினி!
ஹேமு கலினி, தூக்கில் உயிரிழந்த போது, அவனுக்கு வயது 18. உடன் இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லியிருந்தால், ஹேமுவின் ஆயுட்காலம் பல பதினெட்டுகளைத் தாண்டியிருக்கலாம்; ஆனால், யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்ததால், பூமியிலிருந்து அவரை இழுத்துக் கொண்டது தூக்குக் கயிறு.
யாரிந்த ஹேமு கலினி? பாகிஸ்தான் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றால், உங்களின் சந்தேகம் இன்னும் ‘தீவிரமாகி’விடும். நம் தேசத்துக்கு எதிராக, ஏதோ சதி செய்தவர் என்று கற்பனைக் குதிரை பறக்க ஆரம்பித்து விடும். அவர் நம் தேச விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரன் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?சுதந்திரப் போராட்டத்தின்போது, உடைபடாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து மாகாணத்தில் பிறந்த ஹேமு கலினி, ஆங்கிலேயர் வந்த ரயிலைக் கவிழ்க்க சதி செய்த போது, பிடிபட்டவர்; உடன் இருந்த விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுக்க மறுத்ததற்கு, அவருக்குக் கிடைத்த மகத்தான பரிசு, வீர மரணம்.
உலகின் முதல் மனித வெடிகுண்டு – வீர மங்கை குயிலி!
நம் தேசம் கொண்டாட மறந்த, வரலாற்றால் மறைக்கப்பட்ட எத்தனையோ தலைவர்களில் இவரும் ஒருவர். ஆங்கிலேயரை அடித்துத் துரத்திய வேலு நாச்சியார் படையின் தளபதியாக செயல்பட்ட குயிலியின் கதையும், இளைய தலைமுறை அறியாதது. ஆங்கிலேயருக்காக உளவு பார்க்க வந்த வெற்றிவேல் என்பவரை குத்தி கொன்றார். உடலெல்லாம் சீமை எண்ணெயை ஊற்றிக் கொண்டு, தீ வைத்தபடி, ஆங்கிலேயரின் வெடி பொருள் கிடங்கிற்குள் குதித்து உயிரிழந்த குயிலிதான், உலக வரலாற்றின் முதல் தற்கொலைப்படை வீராங்கனை என்பது, ‘கூகுள்’ கூட கண்டறியாத சேதி. (பிறப்பு 03.01.1730 , மறைவு : 1790)
மகன்களின் தலையை வெட்டி தட்டில் கொடுத்த போதும் மண்டியிட மறுத்த மாவீரர்!
பகதூர் ஷா ஜாபர் முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர். சிப்பாய் கலகத்தை ஆதரித்த இவரை ஆங்கிலேயே அரசு மிக அதிகமாக தண்டித்தது. அவரது இரண்டு மகன்கள் மிர்சா முகல், மிர்சா கிசுர் சுல்தான் ஆகியோரின் தலைகளை துண்டித்து மேஜர் ஹட்சன் எனப்படும் ஆங்கிலேயே படைத் தளபதி பகதூர் ஷாவிடம் அவரது தர்பாரில் கொண்டு போய் கொடுத்தான். அழவில்லையே எனக் கேட்டபோது, “மன்னர்கள் அழப்பிறந்தவர்கள் அல்ல. ஆளப் பிறந்தவர்கள்!” என்று பதிலளித்தார் பகதூர் ஷா ஜாபர். வீரமும் அறிவில் முதிர்ச்சியும் கொண்ட இப்பேரரசர் பெரும் உருதுப் புலவரும் கூட. ஆங்கிலேயர் இவரை நாடு கடத்தி பர்மாவில் வைத்தனர்.
இறந்த பின்பு தனது இறுதி ஆசையாக தம்மை அடிமை மண்ணில் புதைக்கவேண்டாம் என்று பர்மாவிலேயே புதைத்துவிடவும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் மறைந்தவுடன் அவரது பர்மாவின் தலைநகர் ரங்கூனில் புதைத்தனர். இதுவன்றோ தேசப்பற்று!
அஸ்ஃபகுலா கான் – இந்திய தேசிய விடுதலைப் போரில் தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமியர்!
உத்தர பிரதேச ஷாஜகான் பூரில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அமைதியாக போராடினால் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது என்ற முடிவுடன் ஆரிய சமாஜத்தில் நண்பர்களுடன் இனைந்து 09.08.1925 அன்று கக்கோரியில் ரயிலில் பிரிடிஷ்ஷார் கொண்டு வந்த தொகையை சுதந்திர போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் வாங்க கொள்ளையடித்தார். அதனால் 19.12.1927ல் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்ட முதல் இஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர் இவர்.
தேசப்பற்றை ஊட்டும் விதத்தில் உருது மொழில் கவிதைகள் பல படைத்துள்ளார். இறப்பதற்கு முன்பு, “தாய் நாட்டிற்காக தூக்கிலடப்படும் முதல் இஸ்லாமியர் என்பதில் பெருமையடைகிறேன்” என்று சந்தோஷமாக வீர மரணத்தை தழுவிக்கொண்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் கைதான பெண் கமலாதேவி, புலித்தேவனின் தளபதி ஒண்டிவீரன், தேசியக்கொடியை வடிவமைத்த ஆந்திரத்துச் சகோதரர் பிங்களி வெங்கய்யா, ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக தனது இரு மகன்களின் தலைகளை தட்டிலே பார்த்தும் தலை வணங்க மறுத்த பகதூர்ஷா ஜபார், செண்பகராமன் பிள்ளை என, நமக்குத் தெரியாத சுதந்திரப் போராளிகளின் பட்டியல் வெகுநீளம்.
இந்த தன்னலம் கருதா தலைவர்கள், தங்களின் உடல், பொருள், ஆவிஅனைத்தையும் தியாகம் செய்து இந்த தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். நாம் நம் தாய் நாட்டிற்காக என்ன செய்யப்போகிறோம்?
இந்திய தேசிய விடுதலைப் போரில் இதுவரை கேள்விப்படாத பல பெயர்களை கேள்விப்பட்டோம். அவர்களின் புகைப்படத்தை பார்த்து பரவசமடைந்தோம். அவர்களின் வீர வரலாற்றை கண்டு திகைத்து நின்றோம். இந்த நாட்டுக்காக இதுவரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எண்ணி வெட்கி தலைகுனிந்தோம்.
பத்தாம் வகுப்பு வரலாறு பாடத்துக்குப் பின், நம் தேசத்துக்காக இன்னுயிர் தந்த தலைவர்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு நம் கல்வி முறை அனுமதிக்கவில்லை; அவர்களைப் பற்றி, நாம் அறிவு கொள்வதில், நம் அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை.
விளைவு… காந்தி, நேருவைத் தாண்டி, நம் தேசப்பற்று நீட்சி பெறுவதில்லை.
Image may contain: one or more people and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக