வியாழன், 21 டிசம்பர், 2023

ஜிஎஸ்டி என்னும் அரக்கன்!

 ஜிஎஸ்டி என்னும் அரக்கன்!

இந்த வருட GST வரலாறு காணாத வருமானம் என்று ஒரு அறிவிப்பு இந்த வருட கடைசியில் வரும் பாருங்க. நாமளும் தேசப் பற்று மேலோங்க சட்டை காலரை மேல் தூக்கிக் கொள்வோம். ஆனால், இதற்கு பின்னால் மிகப் பெரிய சோகம் இருக்கிறது. எத்தனை தொழில் முனைவோர்களை இந்த பெருமை காலில் கீழ் வைத்து நசுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
GST என்பது ஒவ்வொரு வியாபாரியும் அவருடைய லாபத்தில் 18% வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தான் சட்டம். GST வந்த புதிதில் நீங்கள் வாங்கும் நபர் உங்களிடம் வாங்கிய GST தொகையினை கணக்குக் காட்டியிராவிட்டால், அவர்கள் உங்களுக்கு கொடுத்த GST பிடித்தம் செய்த பில்லை காண்பித்து நீங்கள் அந்த வரியை உங்கள் வரித்தொகையிளிருந்து கழித்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் நாம் பொருட்களை வாங்கிய நபர் GST கணக்கை தாக்கல் செய்துள்ளாரா என்று cross check செய்ய எந்த வழியும் இல்லாமலிருந்தது. ஒரு வருடம் கழித்து gstயில் இருந்து ஒரு மெயில் வரும். அதில் நாம் பொருட்கள் வாங்கி நாம் கணக்கு காண்பித்து, ஆனால் நமக்கு போர்ட்களை விற்றவர்கள் கணக்கு காண்பிக்காமல் விட்ட பில்களை தொகுத்து விளக்கம் கேட்கும். நாம் நாம் வாங்கிய பில்களை சமர்ப்பித்து கணக்கை சரி செய்துக் கொள்ளலாம். இதில் பிரச்சினை என்பது கொரொனோ காலத்தில் வந்தது. நிறைய கம்பனிகள், கடைகள், சிறு தொழில்கள் கடையை மூடி விட்டார்கள். அவர்கள் நமது கணக்கில் GST பிடித்தம் செய்த பில் இருக்கிறது. ஆனால் அவர்கள் வரி கட்டாமல் தொழிலை மூடி விட்டு சென்று விட்டார்கள். சிலர் இறந்தும் விட்டார்கள்.
இப்போது அந்த எல்லா கடைகளுக்கும் GST நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. 3,4 வருடங்களுக்கு முன் நீங்கள் input credit எடுத்து உங்கள் வரியில் கழித்துக் கொண்ட தொகையை நீங்கள் வாங்கிய நிறுவனம் கணக்கில் காண்பிக்கவில்லை எனவே அந்த வரிப்பணம் அதற்கு தண்டனை பணம், அதற்கு வட்டி என அந்த வரிப்பணத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று நிறைய பேருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. சிலருக்கு லட்சங்களில், சிலருக்கு கோடிக்கு அருகில் இந்த நோட்டிஸ் வந்துள்ளது. அதை தான் முதலிலேயே கணக்கு காண்பித்து ஒரிஜினல் பில்லையும் கான்பித்தோமே, நாங்கள் இந்த வரியை எங்களுக்கு சப்ளை செய்தவரிடம் கொடுத்துவிட்டோம். அவர் கட்டவில்லையெனில் அவரைத்தானே கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, 'அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு பணம் வரவில்லை, எனவே கட்டுங்கள்.' என்ற ஒற்றை பதில் தான் வருகிறது.
ஒரு சின்ன கணக்கு.
பொருள் உற்பத்தி விலை - 1000.00 GST - 180
தேசிய விநியோகிஸ்தர் - 1100.00 GST - 198-180=18
மாநில விநியோகிஸ்தர் - 1200.00 GST - 216-198=18
பகுதி விநியோகிஸ்தர் - 1300.00 GST - 234-216=18
நகர விநியோகிஸ்தர் - 1400.00 GST - 252-234=18
கடை - 1500.00 GST - 270-252=18
இப்போது இந்த 1500 ருபாய் பொருளுக்கு 252 ரூபாய் வரி செலுத்தியாகி விட்டது. நடுவில் இருந்த நகர விநியோகிஸ்தர் கொரொனோ நேரத்தில் விநியோகம் செய்ய முடியாததால், படு நஷ்டமாகி நிறுவனத்தை மூடி விட்டார். பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். அதனால் அந்த நிறுவனம் GST கட்டாமல் விட்டு விட்டார்கள். இப்போது கடைக்காரருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. அந்த நகர விநியோகிஸ்தர் உங்கள் பில்லை கணக்கு காட்டவில்லை. எனவே, அந்த பொருளுக்கான வரி ருபாய் 180, தண்டனை 180, வட்டி 100, ஆக மொத்தம் ரூபாய் 460/- கட்ட வேண்டும்.
இது ஒரு பொருளுக்கான வரி. 100 ருபாய் லாபத்திற்கு 460+18=478 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றால் என்னாவது? ஒருவருக்கு இது போன்று 50 லட்சம் வரி பாக்கி வந்துள்ளது. அவர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க ஆரம்பிக்க, அரசு அவரது நிறுவன வங்கிக்கணக்கை முடக்கி வைத்துள்ளது. பொருட்களை வாங்க அவர் பணம் அனுப்ப முடியவில்லை. சம்பளம் கொடுக்க முடியவில்லை. வட்டிக்கு வெளியே வாங்கினால் நிறுவனத்தை மேலும் நடத்த முடியாது. வேறு வழியில்லை. நிறுவனத்தை மூடி விட்டார். 30க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் நிற்கிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் கேஸ் போடலாம். எத்தனை வருடங்கள் ஆகுமென்று தெரியாது. ஒரு சில வக்கீல்கள் வெற்றி பெறலாம் என்கிறார்கள். ஒரு சிலர் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள். அப்படியே கோர்ட்டிற்கு போனாலும், அதற்கும் நாம் முன்கூட்டியே ஒரு அமௌண்டை கோர்ட்டில் கட்டியாக வேண்டும். சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு அது சாத்தியம் இல்லாத ஒன்று.
வணிக சங்கங்கள் இதற்கு ஒரு கூட்டு முயற்சி செய்தாக வேண்டும். அல்லது மாநில அரசாங்கமாவது இதை கையில் எடுக்க வேண்டும். இல்லாவிடில் நேர்மையாக வரி செலுத்துபவர்கள் தொழில் செய்ய முடியாமல், ஏமாற்றுபவர்கள் தான் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை வந்துவிடும்.
வணிகர்கள் இனிமேல் GSTR2A சரி பார்த்த பின் GST கட்டுவது தான் சிறந்த வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக